ஸ்டெம் ஸெல்கள் (குருத்தணுக்கள்) என்றால் என்ன?

ஸ்டெம் ஸெல்கள் (குருத்தணுக்கள்) என்றால் என்ன?

குருத்தணுக்கள் என்றால் என்ன?

மனித உடலில் தினசரி ஆரோக்யத்திற்கு தேவையான நூற்றுக்கணக்கான வகை உயிரணுக்கள் உள்ளன. இந்த உயிரணுக்களின்  பொறுப்பு நம் உடலை செயல்பட வைப்பதாகும் – இதயத்தை துடிக்க வைப்பது, மூளையை சிந்திக்க வைப்பது, சிறுநீரகத்தை இரத்தம் சுத்திகரிக்க வைப்பது, பழைய தோல் உதிரும் பொழுது புதிய தோல் உண்டாக்குவது போன்ற பல செயல்கள். குருத்தணுக்களின் தனி பொறுப்பு என்னவென்றால் பிற அனைத்து உயிரணுக்களையும் உருவாக்குவது. குருத்தணுக்கள் பிற உயிரணுக்களின் சுரபியாகும். குருத்தணுக்கள் பெருகும் பொழுது அவை மேலும் பல குருத்தணுக்களையோ அல்லது வேறு வகை உயிரணுக்கள் பலவற்றையோ உருவாக்க கூடியவை. உதாரணமாக, தோலில் இருக்கும் குருத்தணுக்கள் மேலும் பல தோல் குருத்தணுக்களையோ அல்லது பிற விசேஷ கடமை கொண்ட தோல் உயிரணுக்களையோ உருவாக்க கூடியவை. விசேஷ கடமைக்கு ஓர் உதாரணம் தோலுக்கு கருமை தரும் மெலனின் எனப்படும் சாயம் செய்வது.

உங்கள் ஆரோக்கியத்திற்க்கு குருத்தணுக்கள் ஏன் முக்கியமானவை?

நாம் காயப்படும்பொழுதோ  அல்லது நோய்வாய்ப்படும் பொழுதோ நமது உயிரணுக்களும் காயப்படவோ இறக்கவோ நேரிடுகின்றது. இது நிகழும்பொழுது,  குருத்தணுக்கள் செயல்படுத்தப்படுகின்றன. உடலில் காயப்பட்ட திசுக்களை சரிபார்ப்பதும் இறந்த உயிரணுக்களுக்கு மாற்று உண்டாக்குவதுமே குருத்தணுக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வேலையாகும். இச்செயல்களால் குருத்தணுக்கள் நம்மை ஆரோக்கியமாக வைத்து நம் உடலை வேகமாக மூப்படையாமல் பார்த்துக்கொள்கின்றன. ஆகையால் குருத்தணுக்கள் நம் உடலின் பிரத்தியேகமான நுண்ணிய மருத்துவப்படை போல செயல்படுகின்றன.

குருத்தணுக்கள் என்னென்ன வகைப்படும்?

குருத்தணுக்கள் பல்வேறு வடிவங்களில் இருக்கின்றன. விஞ்ஞானிகள் கூற்றுப்படி நம் உடலின் ஒவ்வொரு உறுப்பிற்கும் அதன் பிரத்தியேக குருத்தணுக்கள் உள்ளன. உதாரணமாக, நமது இரத்தம், இரத்த குருத்தணுக்களால் (கிரேக்க மொழி: ஹெமடோபொயடிக்/இரத்தம்-உண்டாக்கும்) செய்யப்படுகிறது. இதுமட்டுமல்லாது, குருத்தணுக்கள் மனித உடலின் ஆரம்பகால வளர்ச்சி நிலைகளிலிருந்தே இருந்து வருகின்றன. இந்த குருத்தணுக்களை உடலுக்கு வெளியே விஞ்ஞானிகள் வளர்க்கும்பொழுது அவைகளை “கரு” (எம்ப்ரியோனிக்)  குருத்தணுக்கள் என்று அழைக்கின்றனர். விஞ்ஞானிகள் கரு குருத்தணுக்களை கண்டு வியந்து ஆராய்ச்சி செய்யக்காரணமாயிருப்பது வேறொன்றுமல்ல; அவைகளின் இயற்கை வேலையே மனித வளர்ச்சியின்போது உடலின் ஒவ்வொரு உறுப்பு மற்றும் திசுவின் கட்டமைப்பை உருவாக்குவதாய் இருப்பது தான். இதனால் என்ன பயன் என்றால், முதிர்ந்த குருத்தணுக்கள் போலல்லாது, கரு குருத்தணுக்கள் உடலின் மற்ற நூற்றுக்கணக்கான வகை உயிரணுக்களை எளிதில் உருவாக்க கூடியவை. உதாரணமாக, இரத்த குருத்தணுக்களால் இரத்த வகை உயிரணுக்களை மட்டுமே செய்ய முடியும்; ஆனால் கரு குருத்தணுக்களால் இரத்த வகை, எலும்பு வகை, தோல் வகை, மூளை வகை மற்றும் பல வகை உயிரணுக்களையும் உருவாக்க முடியும். மேலும், கரு குருத்தணுக்களால் இயற்கையாகவே உயிரணுக்கள் மட்டுமல்லாது, திசுக்கள் மற்றும் உறுப்புகளையும் கூட உருவாக்க இயலும் ஆனால் முதிர்ந்த குருத்தணுக்களால் இது இயலாது. இதன் பொருள் என்னவென்றால், மற்ற குருத்தணுக்களோடு ஒப்பிடுகையில் கரு குருத்தணுக்களுக்கு நோயுற்ற உறுப்புகளை சரிபார்பதில் அதிகத் திறன் உள்ளது. கருத்தரிப்பு சிகிச்சை முடிவுற்று உபயோகமின்றி இருக்கும் எஞ்சிய, ஒரு சில நாட்களே பழையதான, ஆய்வகக் கிண்ணத்தில் உண்டாக்கப்பட்ட கருமுளைகளிலிருந்து (எம்ப்ரியோக்கள்) தான்  கரு குருத்தணுக்கள் தயாரிக்க படுகின்றன.

(ஆங்கிலம்: .பி.எஸ்/ஐபிஸ்இன்ட்யூஸ்ட் ப்லுரிபோடென்ட் ஸ்டெம்) அல்லது தூண்டப்பட்ட பன்திறன் குருத்து உயிரணுக்கள் என்றால் என்ன?

விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் “ஐபிஎஸ்” உயிரணுக்கள் எனப்படும் புது வகை குருத்தணுக்களை கண்டு  உற்சாகமடைந்துள்ளனர். இதற்க்கு காரணம் ஐபிஎஸ் உயிரணுக்கள் ஏறக்குரய கரு குருத்தணுக்களின் அனைத்து பண்புகளையும் கொண்டவை, ஆனால் எந்தக் கருவிலிருந்தும் எடுக்கப் படுவதில்லை. இதனால், ஐபிஎஸ் உயிரணுக்களை உபயோகிப்பதில் எந்த நெறிமுறை  கவலைகளும் இல்லை. கூடுதலாக, ஐபிஎஸ் உயிரணுக்கள் நோயாளியின் உடம்பின் குருத்தணுக்களிலிருந்து செய்யப்படுவதால், அதே நோயாளிக்கு திரும்ப செலுத்தும் பொழுது அவர் உடம்பின் நோய் எதிர்ப்பு அமைப்பு ஐபீஸ் உயிரணுக்களை நிராகரிக்காமல் ஏற்றுக்கொள்கிறது. குருத்தணுக்கள் நிராகரிக்கப் படுவது குருத்தணு சிகச்சையில் ஒரு முக்கிய பிரச்சனையாகும்.

வருங்காலம் எப்படி இருக்கப்போகிறது? குருத்தணுக்கள் உங்கள் மருத்துவர் உங்களுக்கு தரும் சிகிச்சையை எப்படி மாற்ற போகிறது?

குருத்தணுக்களின் இயற்கையான கடமை நோயுற்ற மற்றும் முதிய உயிரணுக்களை மாற்றுவது என்பதால் விஞ்ஞானிகள் குருத்தணுக்களை பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையாக பயன் படுத்தலாமென்று சிந்தித்துள்ளனர். இதன் தத்துவம் என்னவென்றால், நோயாளிகளுக்கு குருத்தணுக்களையோ அல்லது குருத்தணுக்களினால் உருவாக்கப்பட்ட முதிர்ந்த உயிரணுக்களையோ கொடுப்பதன் மூலம் குருத்தணுக்களின் நோயை குணப்படுத்தும் இயற்கை தன்மையை பயன்படுத்தலாம் என்பதுதான். உதாரணமாக, மாரடைப்பு ஏற்பட்ட நோயாளியின் இதயத்திற்கு ஏற்பட்ட சேதத்தை சரி செய்வதை சிகிச்சையின் நோக்கமாகக் கொண்டு குருத்தணுக்களை அளிக்கலாம். இயற்கையாக நம் அனைவர் உடலில் இருக்கும் குருத்தணுக்களின் காயம் சரிசெய்யும் ஆற்றல் குறைவே. முதலில் கூறிய இதயம் உதாரணத்தையே எடுத்துக்கொண்டால், இதயத்தின் இயற்கையான குருத்தணுக்கள் மாரடைப்பினால் ஏற்பட்ட சேதத்தை சரி செய்வதில் சற்றே யோக்கியதையற்றதாக இருக்கின்றன. ஆனால், இலட்சக்கணக்கான குருத்தணுக்கள் செலுத்தப்பட்டால் அதைவிட மிக சக்திவாய்ந்ததாக இருக்கும். எனவே நோயாளிகளுக்கு குருத்தணுக்களை செலுத்துவதன் மூலம் நாம் உடலின் குணமடையும் தன்மையை, இயற்கையாக உடலில் இருக்கும் சிறிதளவு குருத்தணுக்களின் ஆற்றலை தாண்டி மிகவும் அதிகரிக்கிறோம். குருத்தணு சிகிச்சைகள் பரவலாக பயன்படுத்த படுவதற்கு முன் சில சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. இந்த சவால்கள் என்னவென்றால், குருத்தணுக்கள் புற்று நோய் கட்டியை உருவாக்கக்கூடியவை மற்றும் குருத்தணுக்கள் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பால் நிராகரிக்கப்படுகின்றன. எனினும், குருத்தணுக்கள் மருத்துவத்தை உருமாற்ற கூடியவை. இன்னும் வெறும் பத்து இருபதே ஆண்டுகளில் நமக்கோ அல்லது நமக்கு தெரிந்தவர் யாருக்கோ குருத்தணுக்கள் அளிக்கப்பட்டிருக்கும். குருத்தணுக்கள் மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய நோய்களான புற்று நோய், இதய நோய்கள், மூளை சம்மந்தப்பட்ட நோய்களான – பார்கின்சன் நோய், மல்டிபல் ஸ்க்லெரோசிஸ், பக்கவாதம், ஹண்டிங்டன் நோய், முதுகுத்தண்டு காயமென பலவற்றை குணப்படுத்தும் என நம்பிக்கை அளிக்கிறது.

இப்போது கிடைக்கும் குருத்தணு சிகிச்சைகள் யாவை? மருத்துவர்கள் ஏன் இந்த சிகிச்சைகளை எச்சரிக்கையுடன் ணுகவேண்டும் எனவும் இதை கடைசி உக்தியாக மட்டுமே கொள்ளவேண்டும் என்கின்றனர்?

தற்போது, விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்ட பாதுகாப்பான பயனுள்ள குருத்தணு சிகிச்சைகள் சிலவற்றே உள்ளன. எலும்பு மஜ்ஜை (ஆங்கிலம்: போன் மேரோ) மாற்று சிகிச்சை இதற்க்கோர் சிறந்த எடுத்துக்காட்டு. எனினும், உலகம் முழுவதும் பல நிரூபிக்கப்படாத குருத்தணு சிகிச்சைகள் விளம்பரபட்டும் வழங்கப்பட்டும் வருகின்றன. பெரும்பாலும் இச்சிகிச்சைகள், விளையாட்டு வீரர்கள் போன்ற பிரபலங்கள் மேற்கொள்ளும் பொது ஊடகங்களின் கவனத்தை மிகவும் ஈர்க்கிறது. பொதுவாக, விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் இத்தகைய சிகிச்சை உண்மையில் பயன் தருமா என்றும் பாதுகாப்பானவையா என்றும் சொல்வதற்கில்லை என்று நோயாளிகளை எச்சரிக்கை சைய்கிறார்கள்.  நோயாளிகள் இத்தகைய சிகிச்சைகளால் இறந்தும் போயிருக்கின்றனர். குணப்படுத்த முடியாத நோயை எதிர்கொள்ளும்போது அனைத்து வாய்ப்புகளையும் கருதினாலும், நாங்கள் பரிந்துரைப்பது என்னவென்றால் நீங்கள் இச்சிகிச்சைகளை கடைசி நிவாரனமாகவே கருதவேண்டும், அதுவும் உங்கள்  குடும்ப மருத்துவரிடம் ஆலோசித்த பிறகே.

மொழிபெயர்ப்பு:

த்ரிவிக்ரமன் முரளி

இராஜகோபாலன் பார்த்தசாரதி

அரவிந்த் மதன்

4 thoughts on “ஸ்டெம் ஸெல்கள் (குருத்தணுக்கள்) என்றால் என்ன?”

Leave a Reply